பாப்பாரப்பட்டி அருகே வாகன சோதனையில் ரூ.65 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
பாப்பாரப்பட்டி அருகே காரில் கொண்டு சென்ற ரூ.65 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம்,
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பறக்கும் படை அதிகாரி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் பாப்பாரப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது தர்மபுரியில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரில் ரூ.65 ஆயிரம் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காரில் வந்த பாப்பாரப்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவரிடம் விசாரணை நடத்திய போது மளிகை கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக பணம் கொண்டு சென்றதாக தெரிவித்தார். ஆனால் அவர் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் காரில் கொண்டு சென்ற ரூ.65 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த பணத்தை பென்னாகரம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழி, தேர்தல் துணை தாசில்தார் ஆறுமுகம் ஆகியோரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தனசேகரனிடம் விசாரணை நடத்திய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழி உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தார்.
Related Tags :
Next Story