வாக்காளர் விழிப்புணர்வு கோலம் கலெக்டர் பார்வையிட்டார்


வாக்காளர் விழிப்புணர்வு கோலம் கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 31 March 2019 3:45 AM IST (Updated: 31 March 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே வேப்பலோடை உப்பளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே வேப்பலோடை உப்பளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

விழிப்புணர்வு கோலங்கள்

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமத்தில் உள்ள உப்பளத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சகாய மாதா சால்ட் நிறுவனம் சார்பில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு கோலங்கள் போடப்பட்டு இருந்தன. அவற்றை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேற்று காலையில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலின்போது குறைவான வாக்குகள் பதிவான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்குள்ள வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி, சுகாதாரத்துறை, மீன்வளத்துறை, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேர்மையாக வாக்களிக்க வேண்டும்

தற்போது உப்பளத்தில் கோலம் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் நடைபெற உள்ள தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து வாக்காளர்களும் தேர்தல் நாளில் வாக்களிக்க அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாக்காளர்கள் பரிசு பொருட்கள் வாங்காமல் நேர்மையாக வாக்களித்து ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story