தூத்துக்குடியில் கட்சி கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்பு: மண்எண்ணெய் குடித்த தி.மு.க. பிரமுகரால் பரபரப்பு
தூத்துக்குடியில் கட்சி கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பிரமுகர் மண்எண்ணெய் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கட்சி கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பிரமுகர் மண்எண்ணெய் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐகோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. இதில் அனுமதி பெறாமல் நடப்பட்டு உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் உத்தரவின்பேரில், மாநகர பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்பு
இந்த பணி நேற்று 3-வது நாளாக நடந்தது. தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் அனுமதி பெறாமல் நடப்பட்டு உள்ள கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பத்தை அகற்றக்கூடாது என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பெருமாள் என்பவர் கொடிக்கம்பத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் ஏறி போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து தென்பாகம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பெருமாளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென அவர் மண்எண்ணெயை குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் உடனடியாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.
Related Tags :
Next Story