நேருக்குநேர் எங்களை எதிர்க்க முடியாமல் அதிகாரிகளை ஏவி விட்டு முதுகிலே குத்த பார்க்கிறார்கள் துரைமுருகன் பேட்டி
நேருக்கு நேர் எங்களை எதிர்க்க முடியாமல் அதிகாரிகளை ஏவிவிட்டு முதுகில் குத்த பார்க்கிறார்கள் என்று துரை முருகன் கூறினார்.
வேலூர்,
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை அடுத்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு சம்பவம் மத்திய, மாநில அரசால் என்னுடைய வீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து நாலாபுறமும் இருந்த தொண்டர்கள், நண்பர்கள் என் வீட்டின் முன்பு கூடி இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததை கேட்டு நான் மெய்சிலிர்த்து போனேன். இதுதான் தி.மு.க.... இதுதான் நம் கட்சியின் ஒற்றுமை... பந்த பாசம்... அண்ணா காட்டிய உறவு.
என் வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்துள்ளதாக கூறினர். நாங்கள் வந்து பார்த்தோம். 3 பேர் வீட்டில் இருந்தனர். நீங்கள் யார்? என்று கேட்டபோது வருமான வரித்துறை அதிகாரிகள் என்றனர். என் வீட்டை சோதனை செய்ய யாரிடமாவது ஆணை பெற்று வந்துள்ளர்களா?, உத்தரவை காட்ட முடியுமா? என்று கேட்டோம்.
இதையடுத்து அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டு சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து நாங்கள் பறக்கும் படையை சேர்ந்தவர்கள் என்றனர். இவ்வாறு மாறி, மாறி கூறியதால் அவர்கள் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இரவில் வீட்டினுள் சோதனை செய்யக் கூடாது என்று சட்டம் உள்ளது. அதையும் மீறி எப்படி வரலாம் என்று கேட்ட பின்னர் அவர்கள் சென்றனர்.
பின்னர் அதிகாலை 3 மணிக்கு ஒரு ஆணையை வாங்கிக் கொண்டு அவர்கள் மீண்டும் வந்தனர். அதை பார்த்தவுடன் அவர்கள் மீது எங்களுக்கு சந்தேகமில்லை. இதையடுத்து அவர்களை நாங்கள் சோதனை செய்ய அனுமதித்தோம். சோதனை செய்தார்கள், பின்னர் சென்று விட்டார்கள். எனது வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகளோ அல்லது வேறு அதிகாரிகளோ இந்த நேரத்தில் சோதனையிட இது காலம் அல்ல. தேர்தலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் நடத்தவில்லை. சாதாரணமான ஒரு கல்லூரியை நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டில் இந்த நேரத்தில் சோதனை போட வேண்டிய அவசியம் என்ன? போன மாதம் நுழைந்திருக்கலாமே? ஏன் நுழையவில்லை?.
கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எனவே அதை தடுத்துவிட வேண்டும், திசை திருப்ப வேண்டும். மன உளைச்சலை தர வேண்டும். அதனால் பயமுறுத்தி பணிய வைத்து விடலாம் என்று களத்தில் எங்களை எதிர்ப்பதற்கு திராணியற்று போய் இருக்கிற மத்திய, மாநில அரசோடு உறவு கொண்டிருக்கிற சில அரசியல்வாதிகள் செய்திருக்கிற சூழ்ச்சி. நேருக்கு நேர் எங்களை எதிர்க்க முடியாமல் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விட்டு முதுகிலே குத்த பார்க்கிறார்கள்.
ஆனால் யார் துரோகம் செய்தார்கள் என்பது தெரியும். ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது. இதற்கெல்லாம் தி.மு.க.வின் கடைமட்ட தொண்டன் கூட பயப்படமாட்டான். நாங்கள் மிசாவை பார்த்தவர்கள். அடக்குமுறையை சந்தித்தவர்கள். எனவே இப்படிப்பட்ட பூச்சாண்டிகளுக்கு பயப்படமாட்டேன்.
ஆனால் எங்களை எதிர்க்கிற திராணி உள்ளவர்கள் நேரடியாக மோத வேண்டும். ஓடிப்போய் மத்திய, மாநில அரசின் ஆதரவு இருக்கிறது என்று அவர்களது காலில் விழுந்து, நீங்கள் வருமான வரித்துறை சோதனை நடத்துங்கள். அதைப்பார்த்து அவர்கள் பயந்துவிடுவார்கள். நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அரசியலில் இதில் எல்லாம் கரைகண்டவர்கள் நாங்கள். இதையெல்லாம் பொருட்படுத்த மாட்டோம்.
மோடி அரசு இந்த வருமான வரித்துறையை ஏவி விடுவதன் மூலம் எதிர்கட்சிகளை அடக்கிவிடலாம். எல்லோரும் பயந்து விடுவார்கள். மோடிக்கு ஜே என சொல்லிவிடுவார்கள் என்று ஒரு தப்புக்கணக்கு போட்டு இருக்கிறது. இது ஜனநாயக நாடு. இப்படி தப்புக்கணக்கு போட்டவர்கள் எத்தனையோ பேர் அரசியலில் தோற்றுப்போய் இருக்கிறார்கள்.
இது அரசியலில் வெற்றியை தராது. பழியை தரும். என் மகன் வெற்றி பெற்றுவிடுவானோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட சூழ்ச்சி. ஆயிரம் தடைகள் இருந்தாலும் அதை தாண்டி செல்பவர்கள் தான் தி.மு.க.வினர். நான் கலைஞரிடம் பயிற்சி பெற்றவன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story