ஓமலூர் அருகே விவசாய தோட்டத்துக்கு தண்ணீர் தேடி வந்த 3 மான்கள் சாவு


ஓமலூர் அருகே விவசாய தோட்டத்துக்கு தண்ணீர் தேடி வந்த 3 மான்கள் சாவு
x
தினத்தந்தி 31 March 2019 4:00 AM IST (Updated: 31 March 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே விவசாய தோட்டத்துக்கு தண்ணீர் தேடி வந்த 3 மான்கள் இறந்தன.

ஓமலூர், 

ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை வனச்சரகம் ஏற்காடு மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியாகும். இங்கு ஏராளமான மான்கள், காட்டுப்பன்றிகள், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் டேனிஷ்பேட்டை, பெலாபள்ளி, கோம்பை, காஞ்சேரி, உள்கோம்பை, லோக்கூர், பொன் காடு, கணவாய் புதூர் போன்ற காப்பு காடுகள் உள்ளன.

இந்த வனப்பகுதியில கடுமையான வறட்சி நிலவுவதால் இங்குள்ள மான்கள் வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு இரைதேடியும், தண்ணீர் தேடியும் வந்து நாய்கள் கடித்து இறந்து வருகின்றன.

இந்த நிலையில், நேற்று வேப்பிலை ஊராட்சி மங்கானிகாடு என்ற இடத்தில் தண்ணீர் மற்றும் இரைதேடி விவசாய தோட்டத்திற்கு வந்த 2 பெண் மான்கள், நாய்கள் துரத்தி கடித்ததில் பரிதாபமாக செத்தன. இதுபற்றி தகவல் அறிந்த டேனிஷ்பேட்டை வனச்சரகர் பரசுராமமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். இறந்த மான்களை மீட்டு டேனிஷ்பேட்டை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதேபோல் பெரிய வடகம்பட்டியில் விவசாய தோட்டத்துக்கு தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளிமான் கிணற்றில் தவறிவிழுந்து பரிதாபமாக இறந்தது. அந்த மானையும், ே-்டனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் கால்நடை மருத்துவர் பைசு, அந்த 3 மான்களையும் பிரேத பரிசோதனை செய்த பின்பு அடக்கம் செய்யப்பட்டன.

கடந்த ஒரு மாதத்தில் இதுவரை, இரை தேடி விவசாய தோட்டத்திற்கு வந்து நாய் கடித்தும், கிணற்றில் தவறி விழுந்தும் 8 மான்கள் இறந்துள்ளன. இதனால் வனத்துறையினர் வன விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஏற்காடு வனப்பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள மான்கள் அழிந்து விடும் என வன ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story