சேலத்தில், சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு: வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


சேலத்தில், சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு: வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 March 2019 3:45 AM IST (Updated: 31 March 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம், 

சேலம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் திட்டம், தனிகுடிநீர் திட்டம், மின் கேபிள் பதிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்தநிலையில் தற்போது பணிகள் முடிந்து சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. இதிலும் சில இடங்களில் புதிதாக சாலை போட்டாலும் மீண்டும் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்படுகிறது.

சேலம் அம்மாபேட்டையில் வித்யா நகர் உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு புதிதாக தார்சாலை அமைக்க சமீபத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. நேற்று மெயின் தெரு பகுதியில் மட்டுமே சாலைகள் அமைக்கப்பட்டது. ஆனால் குறுக்கு சாலை பகுதியில் தார்சாலை அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், மெயின் தெரு பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்த நிறுத்தப்பட்டு இருந்த வாகனம் அருகே திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை அமைக்கும் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக சாலைகள் அமைக்கப்படவில்லை. தற்போது சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மெயின் ரோட்டில் மட்டுமே சாலை அமைக்கும் பணி நடக்கிறது. ஆனால் குறுக்கு சாலை உள்ள பகுதிகளில் சாலை அமைக்கப்படவில்லை. எனவே சாலை அமைக்கும் பணிகள் முழுமையாக நடைபெற வேண்டும் என்றனர். இதைக்கேட்ட அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story