விழுப்புரம் அருகே ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம் அருகே ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி குப்புநாயக்கன்சந்து பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் கண்ணன் (வயது 30). இவர் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் 2-ம்நிலை காவலராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 2 வருடங்களாக முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அதன் பிறகும் முதுகு தண்டுவட வலி குணமாகவில்லை. இதனால் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அதிகாலை தனது வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக கண்ணனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே கண்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்கொலை செய்துகொண்ட போலீஸ்காரர் கண்ணனுக்கு திருமணமாகி பொன்மணி என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து கண்ணனின் தாயார் ராஜகுமாரி கொடுத்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story