தேனியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைமையில் நடந்தது


தேனியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 31 March 2019 3:00 AM IST (Updated: 31 March 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது.

தேனி,

தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேனியை அருகேயுள்ள கொடுவிலார்பட்டியில் நேற்று நடந்தது. பயிற்சி வகுப்புக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார்.

தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பொது பார்வையாளர் உபேந்திரநாத் சர்மா, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் பிரபாகரரெட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் சரளா ராய், போலீஸ் துறைக்கான பார்வையாளர் ரூகாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி வழங்குவது, தேர்தல் விதிமுறைகளை கையாள்வது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது, கட்சி முகவர்கள், வாக்காளர்களை முறைப்படுத்துவது குறித்த விதிமுறைகள் எடுத்துக் கூறப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி பெற்ற மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல் பயிற்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதைத்தொடர்ந்து வருகிற 7-ந்தேதி, 13-ந்தேதி மற்றும் 17-ந்தேதிகளில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Next Story