சின்னசேலத்தில் தீ விபத்து: மினிலாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் மருந்து பொருட்கள் எரிந்து நாசம்


சின்னசேலத்தில் தீ விபத்து: மினிலாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் மருந்து பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 31 March 2019 3:15 AM IST (Updated: 31 March 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மினிலாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்கள் எரிந்து நாசமானது.

சின்னசேலம், 

ஈரோடு பகுதியை சேர்ந்தவர் பூபதி(வயது 40). டிரைவர். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கோழி நோய் தடுப்பு மருந்துகளை மினிலாரியில் ஏற்றிக்கொண்டு சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு சொந்தமான குடோன்களில் இறக்கி விட்டு செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று காலை ரூ.15 லட்சம் மதிப்புள்ள கோழி நோய் தடுப்பு மருந்துகளை மினிலாரியில் ஏற்றிக் கொண்டு சின்னசேலத்துக்கு புறப்பட்டார். மதியம் சின்னசேலம் வந்ததும் மொத்த வியாபாரியான சக்திவேல் என்பவருக்கு சொந்தமான குடோன் முன்பு மினிலாரியை நிறுத்திவிட்டு, நோய் தடுப்பு மருந்துகள் வந்துள்ளதாக சக்திவேலுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு, மினிலாரியில் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் மினிலாரியில் இருந்த மருந்துகள் திடீரென மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பூபதி இதுபற்றி சின்னசேலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஸ்வநாதன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ரூ.1 லட்சம் மதிப்பிலான மருந்து பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் தீவிபத்துக்கான காரணம் குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story