நத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை: காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்
நத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நத்தம்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கன்னியாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும்படையை சேர்ந்த பிரபா ராஜமாணிக்கம் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் நோக்கி சென்ற காரை பறக்கும்படையினர் சோதனை செய்தனர்.
இதில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த நகைகள் ‘பேக்கிங்’ செய்யப்பட்ட நிலையில் மூட்டை, மூட்டைகளாக கட்டப்பட்டு இருந்தது. காரில் வந்த டிரைவர் உள்பட 3 பேரிடம் நகைகள் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதைத்தொடர்ந்து கார் மற்றும் நகைகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து நத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முத்துக்கழுவனிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இதில் காரைக்குடியில் இருந்து சேலத்திற்கு நகைகளை நத்தம் வழியாக கொண்டு சென்றது தெரியவந்தது.
இதற்கான உரிய ஆவணங்களை காண்பித்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story