நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை தினேஷ் குண்டுராவ் எச்சரிக்கை


நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை தினேஷ் குண்டுராவ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 31 March 2019 4:00 AM IST (Updated: 31 March 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் எச்சரித்துள்ளார்

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் எச்சரித்துள்ளார்.

வேணுகோபால் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் மற்றும் ராகுல்காந்தி பெங்களூருவுக்கு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்கு வருகை தந்தார். பின்னர் அவர், நள்ளிரவு வரை சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து நேற்று தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதாவை விரட்டுவதற்கான...

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் முதல் கூட்டு பிரசாரம் பெங்களூருவில் நாளை(அதாவது இன்று) நடக்கிறது. இந்த பிரசார கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு பேச உள்ளனர். இதற்காக எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே பிரசாரத்தில் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டு பிரசாரம் மூலம் நாட்டுக்கு புதிய தகவலை வெளியிடுவோம். மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து விரட்டுவதற்கான பிரசார கூட்டமாக இருக்கும்.

கடும் நடவடிக்கை

தாவணகெரே தொகுதியில் சாமனூர் சிவசங்கரப்பாவின் மகன் மல்லிகார்ஜுன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை வேட்பாளராக அறிவித்ததில் சிறு, சிறு பிரச்சினைகள் எழுந்திருப்பது உண்மை தான். அந்த பிரச்சினைகள் நாளை(அதாவது இன்று) சரி செய்யப்படும். சிக்கோடி தொகுதியில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த ரமேஷ் ஹட்டிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் காங்கிரஸ் சார்பில் சிக்கோடியில் போட்டியிடுவாரா? என்பது பற்றி தற்போது எதுவும் சொல்ல முடியாது. அதுபற்றி முக்கிய தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

தொகுதி பங்கீடுபடி ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரசார் தேர்தல் பணியாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு யாரும் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story