கொடுமுடி அருகே பயங்கரம் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கொடுமுடி அருகே பயங்கரம் அரசியல் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 31 March 2019 4:45 AM IST (Updated: 31 March 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி அருகே அரசியல் கட்சி பிரமுகர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் ஒத்தக்கடை அருகே உள்ள வடக்கு புதுப்பாளையத்தில் வெங்கம்பூர் பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கு உள்ளது. இதன் அருகில் சுடுகாடு உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை பேரூராட்சி ஊழியர்கள் சிலர் திடக்கழிவு மேலாண்மை குப்பைக்கிடங்கு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

செல்லும் வழியில் சுடுகாடு நுழைவுவாயில் முன்பு ஒரு மோட்டார்சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் தலையில் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். வழி நெடுகிலும் ரத்தம் உறைந்து காணப்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நபர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து உடனே கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி இருந்ததால் அவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

மேலும் நடத்திய விசாரணையில் இறந்தவர் ‘வாழநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 45) என்பது தெரிய வந்தது. இவர் கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி இணை செயலாளராக இருந்து வந்துள்ளார். அவருடைய மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன் (18), சூரியா (17) என்ற 2 மகன்களும், காயத்ரி (16) என்ற மகளும் உள்ளனர்.

இதில் நவீன் ரிக் வண்டி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சூரியா பிளஸ்–2 வகுப்பும், காயத்ரி பிளஸ்–1 வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி மகன்கள் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு பாசூருக்கு சென்றுவிட்டார்’ என்பது தெரியவந்தது.

கொலை குறித்து துப்புதுலக்க சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சுடுகாடு நுழைவுவாயிலில் சிவக்குமார் கிடந்த இடத்தின் அருகே இருந்து மோப்பம் பிடித்தபடி பின்புறம் உள்ள திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கு வரை ஓடியது. அதன்பின்னர் அங்கிருந்து அருகே உள்ள தோட்டத்து கிணற்றை நோக்கி ஓடிச்சென்று உள்ளே பார்த்து குரைத்தது. பின்னர் கரூர்–ஈரோடு மெயின்ரோட்டுக்கு சென்று நின்று கொண்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மனைவி பிரிந்து சென்ற பிறகு வாழநாயக்கன்பாளையத்தில் தனியாக வசித்து வந்த சிவக்குமாருக்கு 2 பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனவே கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டி கொல்லப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அரசியல் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story