மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நிகில் குமாரசாமி பெயர் முதலில் இடம்பெற்றதால் சுமலதா அதிருப்தி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நிகில் குமாரசாமி பெயர் முதலில் இடம்பெற்றதால் சுமலதா அதிருப்தி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 March 2019 5:00 AM IST (Updated: 31 March 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நிகில் குமாரசாமி பெயர் முதலில் இடம்பெற்றதால் சுமலதா அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் அதில் முறைகேடு நடந்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மண்டியா, 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நிகில் குமாரசாமி பெயர் முதலில் இடம்பெற்றதால் சுமலதா அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் அதில் முறைகேடு நடந்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18 மற்றும் 23-ந்தேதிகளில் 2 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மண்டியா தொகுதி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா, மண்டியாவில் சுயேச்சையாக களமிறங்குகிறார். அவருக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்து அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை.

சுமலதாவும், நிகில்குமாரசாமியும் மண்டியாவில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வேட்புமனு பரிசீலனையின்போது நிகில் குமாரசாமியின் மனுவில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சுமலதா கூறினார். ஆனால் தேர்தல் அதிகாரி இதற்கு மறுத்தார். இதனால், குமாரசாமி தனது முதல்-மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், அதற்கு தேர்தல் அதிகாரி மஞ்சுஸ்ரீ உடந்தையாக செயல்படுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

தீவிர பிரசாரம்

இந்த நிலையில், முதல்-மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் கூறியதற்காக சுமலதாவுக்கு தேர்தல் அதிகாரி மஞ்சுஸ்ரீ விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினார். அந்த நோட்டீசுக்கு அவர் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மண்டியாவில் நடிகை சுமலதா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவர் செல்லும் பகுதியில் அவருக்கு மக்கள், பாரம்பரிய முறையில் மேள, தாளங்கள் அடித்து அவரை வரவேற்றனர்.

அவருக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ. எச்.பி.ராமு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரத்தை முடித்துவிட்டு நடிகை சுமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முறைகேடு

முதல்-மந்திரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக புகார் கூறிய எனக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த காலஅவகாசம் போதாது. நான் விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். புகார் அளித்தவர்களிடம் விளக்கம் கேட்பது அபத்தமானது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடாக நிகில் குமாரசாமி ெபயர் முதலிடத்தில் உள்ளது. என்னுடைய பெயர் 20-வது இடத்தில் உள்ளது. பொதுவாக தேசிய கட்சி ேவட்பாளா்களின் பெயர் தான் முதலில் இருக்க வேண்டும்.

அப்படி பாா்த்தால் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளா் பெயர் தான் முதலில் இருக்க வேண்டும். மாறாக நிகில் குமாரசாமி பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது. என்னை தோற்கடிக்க எனது பெயரில் பலர் ேவட்பாளராக உள்ளனர். எனினும் சுமலதா அம்பரீஷ் என்ற என்னுடைய பெயரும், படமும் மக்களுக்கு நன்கு தெரியும். எனவே நான் கட்டாயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முறைகேடு நடக்கவில்லை

இதுகுறித்து பெங்களூருவில், முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மண்டியா தொகுதியில் கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் நிகிலின் பெயர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் இடத்தில் இருப்பதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. விதிமுறைகளின் படி தான், நிகில் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. அதில் தவறு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு கூறினால் கோர்ட்டுக்கு செல்ல எந்த தடையும் இல்லை.

சுமலதா பற்றியோ, அவரது குற்றச்சாட்டு குறித்தோ பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சுமலதாவுக்கு ஆதரவாக பா.ஜனதாவினர் பிரசாரம் செய்வது சந்தோஷம். அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Next Story