கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் மிரட்டி மத்திய பா.ஜனதா அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது
கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் மிரட்டி மத்திய பா.ஜனதா அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது என்று முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் மிரட்டி மத்திய பா.ஜனதா அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது என்று முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
வருமான வரி சோதனை
கர்நாடகத்தில் மந்திரி சி.எஸ்.புட்டராஜு வீடு, அலுவலகங்கள் என 15 இடங்களில் கடந்த 28-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். குறிப்பாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.
மேலும் வருமான வரி சோதனையை கண்டித்து பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட கூட்டணி தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், வருமான வரி சோதனை குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் ஆணையம் தலையிட...
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சோதனை இன்று அதிகாலை (அதாவது நேற்று) வரை நடந்துள்ளது. குறிப்பாக மண்டியாவில் உள்ள காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தொண்டர்கள், கரும்பு ஆலைகளின் உரிமையாளர்கள் வீடுகளில் தொடர் சோதனை நடந்துள்ளது. கரும்பு ஆலைகளின் வளாகத்தில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை வைத்துவிட்டு சென்றுள்ளனர். ரெயில்வே அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு, வாடகை கார்களில் வந்து சோதனை நடத்தி உள்ளனர்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது குறி வைத்து நடத்தப்படும் வருமான வரி சோதனை குறித்து மத்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய தேர்தல் ஆணையம் தலையிட்டால் தான் எங்களது கட்சிகளின் தொண்டர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளால் கொடுக்கப்படும் தொல்லைகளில் இருந்து தப்பிக்க முடியும்.
பழிவாங்கும் அரசியல்
வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர். நான் அவர்களை தவறாக சொல்லவில்லை. யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு தங்களது பணியை செய்ய வேண்டும். யாருடைய வற்புறுத்தலுக்கும் பணிந்து பணியாற்றக்கூடாது என்று சொல்கிறேன். பிரதமர், முதல்-மந்திரி, மந்திரிகள் ஆட்சிக்கு வருவார்கள், போவார்கள். அவர்களுக்கு அந்த பதவிகள் நிரந்தரமில்லை.
ஆனால் அதிகாரிகள் செய்யும் பணி நிரந்தரமானது. அதை உணர்ந்து பணியாற்ற வேண்டும். மைசூருவில் தற்போதும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்களை மிரட்டுவதற்காக, அங்கு அதிகாரிகள் தங்கியுள்ளனர். மத்திய அரசின் உத்தரவின் பேரில் தான் அதிகாரிகள் இவ்வாறு செயல்படுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மத்திய பா.ஜனதா அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story