பள்ளி செல்ல விருப்பம் இல்லாததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை
திருப்பூர் அருகே பள்ளி செல்ல விருப்பம் இல்லாததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர்,
திருப்பூர் கொண்டப்பகவுண்டர் லே–அவுட்டை சேர்ந்தவர் பகவதி. இவருடைய மனைவி முத்துலட்சுமி(வயது 32). இவர்களுடைய மகள் அம்சவேணி(14). இவள் மேட்டாங்காட்டில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தாள். தனக்கு படிக்க விருப்பமில்லை என்றும், அதனால் வேலைக்கு செல்ல விரும்புவதாகவும் தனது தாய் அம்சவேணியிடம் கூறியுள்ளாள். ஆனால் முத்துலட்சுமி, தனது மகளிடம் பொதுத்தேர்வு எழுதி 10–ம் வகுப்பை முடித்துவிட்டு அதன்பிறகு வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த அம்சவேணி கடந்த 23–ந் தேதி வீட்டில் இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தாள். வீட்டினர் சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அம்சவேணி நேற்றுமுன்தினம் இறந்தாள்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.