ரமேஷ் ஹட்டிக்கு ‘சீட்’ வழங்காததால் பா.ஜனதா மேலிட தலைவர்கள் மீது எடியூரப்பா அதிருப்தி காங்கிரசில் சேர உமேஷ் ஹட்டி முடிவு?
சிக்கோடி தொகுதியில் ரமேஷ் ஹட்டிக்கு சீட் வழங்காததால் பா.ஜனதா மேலிட தலைவர்கள் மீது எடியூரப்பா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
சிக்கோடி தொகுதியில் ரமேஷ் ஹட்டிக்கு சீட் வழங்காததால் பா.ஜனதா மேலிட தலைவர்கள் மீது எடியூரப்பா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது சகோதரருக்கு சீட் வழங்காததால், பா.ஜனதாவில் இருந்து விலகி உமேஷ் ஹட்டி காங்கிரசில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
்எடியூரப்பா சிபாரிசு
கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மண்டியாவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அந்த தொகுதியில் பா.ஜனதா கட்சி போட்டியிடவில்லை.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினிக்கும், சிக்கோடி தொகுதியில் தனது நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மந்திரி உமேஷ் ஹட்டியின் சகோதரர் ரமேஷ் ஹட்டிக்கு சீட் வழங்கும்படி பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு எடியூரப்பா சிபாரிசு செய்திருந்ததாக தெரிகிறது.
மேலிட தலைவர்கள் மீது அதிருப்தி
ஆனால் எடியூரப்பா கூறியப்படி பெங்களூரு தெற்கு மற்றும் சிக்கோடி தொகுதிகளுக்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் வேட்பாளர்களை நியமிக்கவில்லை. மாறாக பெங்களூரு தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூர்யாவும், சிக்கோடியில் அண்ணாசாகேப் ஜோலேவும் பா.ஜனதா சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், எடியூரப்பாவின் சிபாரிசை பா.ஜனதா மேலிடம் நிராகரிப்பதற்கு, கர்நாடக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான பி.எல்.சந்தோஷ் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக தனது நெருங்கிய ஆதரவாளரான உமேஷ் ஹட்டியின் சகோதரர் ரமேஷ் ஹட்டிக்கு சிக்கோடி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எடியூரப்பா நினைத்திருந்தார். கடைசி நேரத்தில் ரமேஷ் ஹட்டிக்கு சீட் வழங்காததால் எடியூரப்பா கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தான் கூறியவருக்கு சீட் கொடுக்காததால் பா.ஜனதா மேலிட தலைவர்கள் மீதும், பி.எல்.சந்தோஷ் மீதும் எடியூரப்பா அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரசில் சேர முடிவு?
அதே நேரத்தில் ரமேஷ் ஹட்டிக்கு சீட் கிடைக்காமல் போனது குறித்து தனது ஆதரவாளர் உமேஷ் ஹட்டியை தொடர்பு கொண்டு பேசி தனது வருத்தத்தை எடியூரப்பா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மேலிட தலைவர்கள் மீதான அதிருப்தி பற்றி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் பகிரங்கமாக எடியூரப்பா பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், சிக்கோடி தொகுதியில் தனது சகோதரர் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள உமேஷ் ஹட்டி, சிக்கோடியில் தேர்தல் பிரசாரம் செய்யாமல் இருக்க தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
மேலும் சகோதரருக்கு சீட் கிடைக்காததால் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ேசர உமேஷ் ஹட்டி முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, உமேஷ் ஹட்டி, ரமேஷ் ஹட்டியை எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
Related Tags :
Next Story