கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் விரக்தி


கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் விவசாயிகள் விரக்தி
x
தினத்தந்தி 31 March 2019 4:15 AM IST (Updated: 31 March 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

பாபநாசம்,

பாபநாசம் தாலுகாவில் 60 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கடந்த 2 மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. அவற்றை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து வருவதால் எடை இழப்பு ஏற்பட்டு வீணாகிறது. கடும் சிரமங்களுக்கு இடையில் அறுவடை செய்த நெல், கொள்முதல் நிலையங்களில் தேங்கி வீணாகி வருவதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

கொள்முதல் செய்த நெல்லுக்காக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய பணம் செலுத்தப்படவில்லை. நெல் மூட்டைகளின் எடை இழப்பை ஈடு செய்யும் வகையில் கொள்முதல் நிலைய பணியாளர்களே பணம் செலுத்த வேண்டும் என நுகர்பொருள் வாணிபக்கழகம் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் கொள்முதல் நிலைய பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பாபநாசம் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. பல ஆயிரம் செலவு செய்து கடும் சிரமத்துக்கு மத்தியில் விளைவித்த நெல்லை வீணாக்கி வருகிறார்கள்.

பெரும்பாலான விவசாயிகளுக்கு நெல்லுக்கான தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை சேமிப்பு மையங்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story