டிரைவருக்கு ‘திடீர்’ வலிப்பு: மின்கம்பத்தில் தனியார் பள்ளி வேன் மோதியது


டிரைவருக்கு ‘திடீர்’ வலிப்பு: மின்கம்பத்தில் தனியார் பள்ளி வேன் மோதியது
x
தினத்தந்தி 31 March 2019 4:15 AM IST (Updated: 31 March 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் தனியார் பள்ளி வேனை ஓட்டி சென்ற டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் வேன் மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மாணவ-மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருடைய மகன் ஸ்டாலின்(வயது26). இவர் கும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

கொற்கை, பட்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 15-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ரெயில்வே கேட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் ஸ்டாலினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் வேன் சாலையில் தாறுமாறாக ஓடி, சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் டிரைவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 சைக்கிள்கள் நசுங்கி சேதம் அடைந்தன. விபத்து குறித்து பட்டீஸ்வரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி வேனை ஓட்டிச்சென்ற டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story