100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன ஊர்வலம்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன ஊர்வலத்தை கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விருதுநகர்,
வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் தேர்தல் தொடர்பான துண்டுப்பிரசுரம் வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதிமொழி எடுத்தல் போன்றவை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி, அங்குள்ள பொதுமக்களிடையே தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன ஊர்வலம் விருதுநகரில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவஞானம் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில், விருதுநகர் தலைமையிடத்தில் பணிபுரியும் 150 அரசு அலுவலர்களும், சாத்து£ர் வட்டத்தில் பணிபுரியும் 150 அரசு அலுவலர்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் பணிபுரியும் 200 அரசு அலுவலர்களும் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் சென்றவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும். தங்கள் பெயர் மற்றும் புகைப்படம் உள்ள வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதியஆவணம் உள்பட 11 விதமான அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்ற விவரங்களையும் உள்ளடக்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் கலெக்டர் வளாகத்தில் தொடங்கி சூலக்கரை, நடுவப்பட்டி, நத்தத்துப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி,கோட்டூர், கூத்திப்பாறை, மெட்டுக்குண்டு, பாலவநத்தம், அல்லம்பட்டி, புதிய பஸ் நிலையம் வழியாக வந்து மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துக்களை உள்ளடக்கிய ரங்கோலி கோலங்களை வரைந்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.