தேர்தல் தொடர்பு மைய செயல்பாடுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு


தேர்தல் தொடர்பு மைய செயல்பாடுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 31 March 2019 3:45 AM IST (Updated: 31 March 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தின் செயல்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம்,

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்கள் பற்றி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 1950 என்ற கட்டணமில்லா தொடர்பு எண் மூலம் மாவட்ட தேர்தல் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த எண்ணில் இதுவரை மொத்தம் 2,149 அழைப்புகள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.

மேலும் தேர்தல் நன்னடத்தை விதிமீறல் தொடர்பாக கண்காணிப்பு களப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பறக்கும் படை, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 வீதம் மொத்தம் 12 குழுக்களும், நிலைத்த கண்காணிப்பு 12 குழுக்களும் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேர்தல் நன்னடத்தை விதிமீறல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை, நிலைத்த கண்காணிப்பு குழு வாகனங்களை ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்பு பணிகளை ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் பார்வையாளர் நரேந்திர சிங் பர்மார், மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்கள் குறித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் செயல்பாடு குறித்தும் தேர்தல் பார்வையாளர் நரேந்திர சிங் பர்மார், மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி உடனிருந்தார்.


Next Story