தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுப்பு: கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் - ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தகவல்


தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுப்பு: கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் - ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தகவல்
x
தினத்தந்தி 31 March 2019 4:04 AM IST (Updated: 31 March 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுப்பதாக கூறி கூடலூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு வருகிற 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தெரிவித்து உள்ளார்.

கூடலூர்,

கூடலூர் சாலீஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குனருக்கு, பிளாண்டேஷன் லேபர் அசோசியேஷன்(ஏ.ஐ.டி.யு.சி) தலைவர் பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நீலகிரியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் அதிக உற்பத்தி நடைபெறுகிறது. இதனால் சந்தையில் கூட்டுறவு தேயிலைத்தூள் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. கூடலூர் சாலீஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் தின ஊதியத்தில் அலுவலக வேலைகளை கவனித்து வந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுப்பது, ஆள்குறைப்பு செய்வது என நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையால் அதிருப்தியும், மனச்சோர்வும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

பதிவறை எழுத்தர், பேரேடுகள் பராமரித்தல், தினப்பதிவேடு உள்ளிட்ட அலுவலக பணிகளில் சாதாரண தொழிலாளர்களாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தனர். இவர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்காமல் தொழிற்சாலை நலனுக்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்கள் என யாரும் மறுக்க முடியாது. பணியில் நிரந்தர தன்மை கொண்ட தொழிற்சாலை, தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பட்டியலின்படி வேலை வழங்க மறுப்பது தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 25(பி)-ன்படி தவறு.

மேலும் பெண் தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இரவுபணியாற்ற நிர்பந்தப்படுத்தக்கூடாது. அவ்வாறு அவர்களை இரவில் வேலைக்கு வரச்சொல்வது சட்ட விரோதமானது. நள்ளிரவு பணி முடிந்து பெண் தொழிலாளர்கள் வீடு திரும்ப முடியாத நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏற்கனவே இன்கோ சர்வ் நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பதிலாக 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருக்கும்போது பணி மாற்றம் செய்வது, தொழிலாளர்களுக்கு பணி வழங்க மறுப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 5-ந் தேதி கூட்டுறவு தொழிற்சாலை முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். எனவே தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story