சமரசம் பேசுவது போல் அழைத்து ரவுடி கொலை: தலைமறைவான 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்


சமரசம் பேசுவது போல் அழைத்து ரவுடி கொலை: தலைமறைவான 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 30 March 2019 11:15 PM GMT (Updated: 30 March 2019 10:58 PM GMT)

காரைக்காலில் சமரசம் பேசுவது போல் அழைத்து ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பி ஓடிய 3 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால்,

காரைக்கால் புதுநகரை சேர்ந்த ரகமத்துல்லா மகன் காஜா செரீப் (வயது 25), ரவுடி. குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது சிறையில் இருந்த சிவா என்கிற சிவநேசன் (27), ஆனந்த் (26), விவேக் (26), உமாமகேஸ்வரன் (28), செல்வமுத்துகுமார் (27) ஆகிய ரவுடிகளோடு காஜா செரீப்புக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதில் விவேக்கும், காஜா செரீப்பும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நோக்கத்துடன் இருந்து வந்துள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் இவர்கள் முன்விரோதத்துடன் இருந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி காஜா செரீப்பை சமரசம் பேசுவதுபோல் சிவநேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் கோட்டுச்சேரி ஜீவா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் மது குடித்தனர். போதை தலைக்கேறியதும் விவேக் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காஜா செரீப்பை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்து, அந்த வீட்டு வாசலில் சுற்றுச்சுவர் அருகில் குழி தோண்டி உடலை புதைத்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

திடீரென காஜாசெரீப் மாயமானது குறித்து அவரது தந்தை ரகமத்துல்லா காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப்பின் காஜா செரீப் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசுக்கு தெரியவந்தது. அவருடன் நட்பாக பழகி எதிரிகளானவர்களால் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறி இருப்பதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காஜா செரீப்பை கொலை செய்து புதைத்ததாக சிவநேசன், ஆனந்த் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து காஜா செரீப்பின் எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பயங்கர சம்பவத்தில் தொடர்புடைய விவேக், உமாமகேஸ்வரன், செல்வமுத்துகுமார் ஆகிய 3 பேரும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் தஞ்சை, நாகை, திருவாரூர் பகுதியில் முகாமிட்டு, தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Next Story