பொள்ளாச்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அ.ம.மு.க. சின்னமான பரிசு பெட்டியுடன் வாக்கு கேட்டதாக பரபரப்பு


பொள்ளாச்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அ.ம.மு.க. சின்னமான பரிசு பெட்டியுடன் வாக்கு கேட்டதாக பரபரப்பு
x
தினத்தந்தி 30 March 2019 11:15 PM GMT (Updated: 30 March 2019 11:15 PM GMT)

பொள்ளாச்சி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அ.ம.மு.க. சின்னமான பரிசு பெட்டியுடன் வாக்கு கேட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுகின்றது. இதன் காரணமாக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகா ரத்தினம் பொள்ளாச்சி நகரில் கடந்த 2 நாட்களாக வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று, டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கு இருந்த மூதாட்டி ஒருவர் டி.டி.வி. தினகரன் உருவப்படத்துடன் இருந்த பரிசு பெட்டியை கொண்டு வந்து கொடுத்தார். மேலும் இதுபோன்று நீங்களும் தருவீர்களா? என்று கேட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மூகாம்பிகா ரத்தினம், அந்த பரிசு பெட்டியின் மீது, அவரது கட்சி சின்னமான டார்ச் லைட்டை அடிப்பது போன்று புகைப்படம் எடுத்து, தனது முகநூல் பக்கத்தில் (பேஸ்புக்) பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் அவர் பரிசு பெட்டியை வைத்திருப்பது போன்று மற்றொரு புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் யாரோ பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் பரிசு பெட்டிக்கு வாக்குகேட்பதாக தகவல்கள் வெளியாகி பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகா ரத்தினம் கூறியதாவது:-

பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்ய சென்ற போது ஒரு மூதாட்டி பரிசு பெட்டியை எடுத்து வந்து, இதை மாதிரி நீங்களும் கொடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு நாங்கள் அப்படி எல்லாம் கொடுப்பதில்லை. இது மாற்று அரசியலுக்கான நேரம். பரிசு பொருட்கள் எல்லாம் கொடுக்க முடியாது. நீங்கள் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். பரிசு பொருட்கள் கொடுத்து உங்களை ஏமாற்றுகிறார்கள். உங்கள் ஓட்டை நீங்கள் விற்க கூடாது. அதன் பிறகு நீங்கள் அவர்களிடம் எதுவும் கேட்க முடியாது என்றோம். இந்த தகவலை வெளியில் சொல்ல வேண்டும் நினைத்து தான் முகநூலில் பதிவு செய்தேன். ஆனால் நான், பரிசு பெட்டியை காட்டி வாக்களிப்பது போன்று வேறுபடத்தை பதிவிட்டுள்ளனர். இது யாரென்று தெரியவில்லை. கண்டிப்பாக நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய வாக்காளர்களும், நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களும் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். மேலும் அந்த பரிசு பெட்டியில் என்ன இருந்தது என்பது எனக்கு தெரியாது. அதை நான் திறந்து பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story