அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனியாக இயக்கம் கண்டவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை ஆம்பூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனியாக இயக்கம் கண்டவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை ஆம்பூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2019 4:45 AM IST (Updated: 31 March 2019 9:51 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனியாக இயக்கம் கண்டவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை என்று ஆம்பூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

ஆம்பூர், 

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அவர் வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

வாணியம்பாடியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதைத்தொடர்ந்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரே வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெ.ஜோதிராமலிங்கராஜா ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நடைபெற இருக்கிற பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி வாய்ப்பு வேட்பாளராக தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வேட்பாளராக ஜோதிராமலிங்கராஜா தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் வெற்றி பெற்றதும் இப்பகுதி மக்களின் தேவைகள் என்னவென்று அறிந்து, அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்.

நாடாளுமன்ற தேர்தலில் நல்லவர்கள் ஒன்றுகூடி அமைக்கப்பட்டதுதான் அ.தி.மு.க.வின் வெற்றிக்கூட்டணி. மத்தியில் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டு காலம் தி.மு.க. இடம் பெற்று இருந்தது. தி.மு.க.வை சேர்ந்தவர்கள் 9 பேர் மத்திய மந்திரிகளாக இருந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் எந்த தொலைநோக்கு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. தி.மு.க.வினருக்கு நிர்வாக திறமை இல்லை.

இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் அரசுகள்தான். ஒரே ஒரு திட்டம்தான் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அது சேதுசமுத்திர திட்டம். இத்திட்டத்தினால் ரூ.40 ஆயிரம் கோடி வீணாகி போனது.

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அரசாணையில் கொண்டு வந்தவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். காவிரி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமை. காவிரி தண்ணீர் இல்லாமல் தஞ்சை தரணி பாலைவனம் ஆகாமல் தடுத்தவர் ஜெயலலிதா. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது வழக்கம். நிலஅபகரிப்பு, மிரட்டி நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கியவர்கள் தி.மு.க.வினர். ஆனால் இன்று தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று கூறுகின்றனர். ஆனால் எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைத்து கூட பார்க்க முடியாது.

உணவு உற்பத்தியில் தமிழகம் கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து விருது பெற்று வருகிறது. தொழில் உற்பத்தியில் 2-ம் இடம் பிடித்துள்ளது. தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு விளங்குகிறது.

ரமலான் நோன்பு காலத்தில் விலையில்லா அரிசி 4,500 டன் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உலமாக்களுக்கு விலையில்லா மிதிவண்டி அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. இஸ்லாமிய பெண்கள் வீடுகளிலேயே சிறுதொழில் செய்வதற்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஆணையம் அமைக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து விட்டு சென்றவர்களால் தான் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தனியாக இயக்கம் கண்டு வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. சுயநலவாதிகளுக்கு எதிராக நீங்கள் போடும் ஓட்டு அவர்கள் வேறு எந்த தேர்தலிலும் போட்டியிடாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

வேலூர் தொகுதி மிகவும் விழிப்புணர்வு பெற்ற தொகுதி ஆகும். வேலூர் மக்கள் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் ஜெ.ஜோதிராமலிங்கராஜா ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், அ.தி.மு.க. நகர செயலாளர் எம்.மதியழகன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் டில்லிபாபு, விவசாய பிரிவு செயலாளர் ஆர்.வெங்கடேசன் மற்றும் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வாணியம்பாடியில் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நடந்த தேர்தல் பிரசாரத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் ஆர்.மூர்த்தி ஆகியோரை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “ஜெயலலிதா 2016-ம் ஆண்டு தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். சிறுபான்மை பிரிவு மக்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் பாதுகாப்பானது அ.தி.மு.க. அரசு. இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என ஸ்டாலின் கூறி வருகிறார். 1½ கோடி தொண்டர்களை கொண்ட இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டிருக்கிறது” என்றார்.

பிரசாரத்தின்போது ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர தேர்தல் பொறுப்பாளர் பெருமாள்நகர் ராஜன், நகர செயலாளர்கள் ஜெ.கே.என்.பழனி, எல்.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் வி.ராமு, பொகளூர் பிரபாகரன், கே.எம்.ஐ.சீனிவாசன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தின்போது குடியாத்தம் பிச்சனூர் பாரதியார் தெருவை சேர்ந்த நேரு- கல்பனா தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு ஜெயராமன் என்று ஓ.பன்னீர்செல்வம் பெயர் சூட்டினார்.

Next Story