வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் பொது பார்வையாளர் வாணிமோகன் பேச்சு
வேட்பாளர் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தேர்தல் பொது பார்வையாளர் வாணி மோகன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விளக்க கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் தேர்தல் பொதுப்பார்வையாளர் வாணி மோகன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் தேர்தல் பொதுப்பார்வையாளர் வாணி மோகன் பேசும்போது கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையமானது ஒளிவுமறைவற்ற வெளிப்படையான தேர்தலை நடத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் வேட்பாளர்கள் வாகனங்கள் அனுமதி, கூட்டங்கள் நடத்த அனுமதி, ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி ஆகியவற்றை இணையதளம் மூலம் பெறலாம். மேலும் வாக்காளர்கள், ஏதேனும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை பார்வையிட நேர்ந்தால், அதை அனுப்ப சி-விஜில் என்ற குடிமக்கள் கண்காணிப்பு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் மூலமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, நடவடிக்கை மேற்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதோடு, தங்கள் கட்சியின் தொண்டர்களுக்கும் தெரிவித்து அவற்றை கடைபிடிக்க செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குப்பதிவு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்து மாதிரி வாக்குப்பதிவில் கலந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிராந்தி குமார், மணிராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story