பில்பருத்தி வனப்பகுதியில் மானை வேட்டையாடியவர் கைது 4 பேருக்கு வலைவீச்சு
பில்பருத்தி வனப்பகுதியில் மானை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரக அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வனவர்கள் கோவிந்தராசன், வேடியப்பன் மற்றும் வனத்துறையினர் பில்பருத்தி வனப்பகுதி வாசிகவுண்டனூர் பச்சையம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 5 பேர், 2 மோட்டார் சைக்கிள்களில் மூட்டை மற்றும் துப்பாக்கியுடன் சென்றனர். அவர்களை வனத்துறையினர் நிற்குமாறு கூறினர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்றனர். அதில் ஒருவர் மூட்டை மற்றும் மோட்டார் சைக்கிளுடன் பிடிபட்டார். மற்ற 4 பேர் தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து வனத்துறையினர் பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கே.புத்தூரை சேர்ந்த அண்ணாமலை மகன் லட்சுமணன் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடியவர்கள் ஏற்காடு அருகே உள்ள சேட்டுக்காடு லோகநாதன், வெள்ளக்காடு பாலகிருஷ்ணன், சுரேஷ், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாசிக்கவுண்டனூரை சேர்ந்த கோவிந்தசாமி என்பதும், நாட்டுத்துப்பாக்கி மூலம் வனப்பகுதியில் மானை வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் லட்சுமணனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வேட்டையாடிய மானின் உடலை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். லட்சுமணனை வனத்துறையினர் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story