கலசபாக்கம் அருகே சினிமா பாணியில் மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் உயிர்தப்பிக்க லாரியில் இருந்து குதித்தபோது கால் முறிந்தது
கலசபாக்கம் அருகே நள்ளிரவில் சினிமா பாணியில் மணல் கடத்தலை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர், உயிர் தப்பிப்பதற்காக லாரியில் இருந்து குதித்தபோது கால் முறிந்தது. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கலசபாக்கம்,
திருவண்ணாமலையை அடுத்த கலசபாக்கம் செய்யாற்றில் மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சிலர், அதிகாரிகளிடம் தொடர்பு வைத்துக்கொண்டு பகலில் பெண்களை ஆற்றில் விட்டு மணலை அள்ளி சேகரிக்கின்றனர். அந்த பெண்கள் சேகரிக்கும் மணலை தனியாக குவித்து வைத்து விட்டு மாலையில் திரும்புகின்றனர். பின்னர் அந்த மணலை நள்ளிரவில் கடத்தல்காரர்கள் லாரியில் கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.
செய்யாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்து வருகின்றனர். ஆனால் மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள செய்யாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்துவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் என 2 பேர் திருவண்ணாமலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தென்பள்ளிப்பட்டு பகுதிக்கு சென்றனர். அப்போது ஆற்றில் இருந்து ஒரு லாரி மணல் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி வந்துகொண்டிருந்தது.
போலீசார் அந்த லாரியை மடக்கி உள்ளனர். இதனை கண்ட லாரி டிரைவர் வேகத்தை குறைத்து நிற்பது போல் நின்று மீண்டும் வேகமாக ஓட்டிச் சென்று உள்ளார்.
உடனே லாரியை போலீசார் துரத்தி சென்று உள்ளனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் சினிமா பாணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து லாரி மீது தாவி மேலே ஏறினார்.
இதனை கண்ட லாரி டிரைவர் போலீசாரை கொலை செய்யும் நோக்கில் நாயுடுமங்கலம் அருகே ஒரு குறுக்கு சாலையில் உள்ள மரத்தில் மோதுவது போல் வேகமாக சென்று உள்ளார்.
இதனால் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் உயிர்தப்புவதற்காக லாரியில் இருந்து கீழே குதித்து உள்ளார். அப்போது அவர் கீழேவிழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி, படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story