மாணவி மாயமான வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய 3 பேர் கைது


மாணவி மாயமான வழக்கு: போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2019 3:30 AM IST (Updated: 1 April 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே மாணவி மாயமான வழக்கில் விசாரணைக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னங்குறிச்சி, 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள காக்காபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கோரிமேட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். அதே போல் ஏற்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபரும் இங்கு படித்து வருகிறார். இவர்கள் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாணவி தரப்பினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி மாயமானார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மாயமான மாணவி ஏற்காடு அடிவாரம் பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீஸ் நண்பர் குழுவை சேர்ந்த ஒருவர் ஆகியோர் சேலம் ஏற்காடு அடிவாரம் இந்திரா நகர் பகுதியில் உள்ள முருகன் (வயது 52) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து முருகன், அவருடைய மகன் கார்த்திக் (25), அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் ஆகியோர் சேர்ந்து விசாரணைக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பின்னர் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், கெட்ட வார்த்தையால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துராமன், முருகன், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story