மாவட்டத்தில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு - கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காக்களிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறினார்.
தேனி,
தேனி மாவட்ட உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட க.புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இதேபோல் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பல்லவி பல்தேவ், தேர்தல் பொது பார்வையாளர் உபேந்திரநாத் சர்மா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 313 வாக்குச்சாவடிகளும், பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 296 வாக்குச்சாவடிகளும், போடி சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும், கம்பம் சட்டமன்ற தொகுதியில் 295 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,218 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனி தாலுகாவில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1,465 பேருக்கு அந்த பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆண்டிப்பட்டி தாலுகாவில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1,429 பேருக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றுள்ளது.
போடி தாலுகாவில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1,024 பேருக்கு முத்துதேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும், உத்தமபாளையம் தாலுகாவில் க.புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் 2,300 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் 127 மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.
வருகிற 7-ந்தேதி 2-ம் கட்ட பயிற்சியும், 13-ந்தேதி 2-ம் கட்ட மறுபயிற்சியும், 17-ந்தேதி 3-ம் கட்ட பயிற்சியும் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story