தி.மு.க. அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும் - கடலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு


தி.மு.க. அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும் - கடலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 31 March 2019 11:35 PM GMT (Updated: 31 March 2019 11:35 PM GMT)

தி.மு.க. அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும் என்று கடலூரில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

கடலூர், 

கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று மாலை கடலூர் முதுநகர் மணிக்கூண்டில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் 450 அமைப்புகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் தி.மு.க. கூட்டணியை ஒரு அமைப்பு கூட ஆதரிக்கவில்லை. திண்டுக்கல் இடைத்தேர்தலில் தான் எம்.ஜி.ஆர். இரட்டை சிலை சின்னத்தை தேர்வு செய்தார். அந்த தேர்தலில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். முதல் தேர்தலிலே வெற்றி கிடைத்தது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1982-ம் ஆண்டு தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவர் கடலூர் கூட்டத்தில் பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சை கேட்ட எம்.ஜி.ஆர். அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கினார். ஆக திண்டுக்கல் தொகுதியிலும், கடலூர் தொகுதியிலும் பா.ம.க. தான் போட்டியிடுகிறது. மற்ற தொகுதியிலும் பா.ம.க. போட்டியிடுகிறது. இருப்பினும் இதை வரலாறுக்காக கூறுகிறேன்.

பெண்கள் நினைத்தால் எதையும் மாற்றக்கூடியவர்கள். தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். பெண்கள் தான் மெஜாரிட்டி, ஆண்கள் மைனாரிட்டி. நீங்கள் நினைத்தால் எதையும் செய்யலாம். பெண்களுக்கு 3 சக்தி உள்ளது. ஆக்கும் சக்தி, காக்கும் சக்தி, அழிக்கும் சக்தி. அரசியலில் தி.மு.க.வை அழிக்க போகிறீர்கள். இந்த தேர்தலோடு தி.மு.க. அழியும். இனி தி.மு.க. எந்த தேர்தலிலும் வெற்றி பெறாது. இந்த நாடாளுமன்ற தேர்தலோடு தி.மு.க. அத்தியாயம் முடிவுக்கு வரும்.

கடலூர் துறைமுகம் பெரிய துறைமுகம். அது மணல் மூடி சின்ன துறைமுகமாக மாறி விட்டது. அந்த துறைமுகத்தை டெல்லி அரசு தான் ஆழப்படுத்த வேண்டும். அதற்கு நாம் தூண்டுகோலாக இருப்போம். இந்த அரசும் சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு ரெயில்பாதை திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. அதை பா.ம.க. மந்திரியாக இருந்த வேலு தான் கொண்டு வந்தார். அந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம்.

மீனவர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அதை கண்டித்து முதல் அறிக்கை வெளியிடுவது நான் தான். என்னை பார்த்து தான் மற்றவர்கள் காப்பி அடிப்பார்கள். மீனவர்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவார்கள். அவ்வாறு இரட்டை இலைக்கு தொடர்ந்து வாக்களித்தவர்கள் இப்போது மாம்பழத்துக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

முன்னதாக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், மீனவரணி செயலாளர் தங்கமணி, நகர துணை செயலாளர் கந்தன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ.சி.மணி, மாவட்ட செய்தி தொடர்பாளர் சத்தியா, தே.மு.தி.க. ராஜாராமன், பா.ஜ.க. பொன்னி.ரவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிழக்கு ராமபுரம், குள்ளஞ்சாவடி, நெய்வேலி இந்திராநகர், காடாம்புலியூர், புதுப்பேட்டை ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Next Story