தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி முப்பரிமாண ரதம்


தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி முப்பரிமாண ரதம்
x
தினத்தந்தி 2 April 2019 4:00 AM IST (Updated: 2 April 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் தேர்தல் விழிப்புணர்வை வலியுறுத்தி தொடங்கிய முப்பரிமாண ரதத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

பூந்தமல்லி,

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு முப்பரிமாண ரத தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் கலெக்டர் தலைமையில் மகளிர் சுயஉதவி குழுவினர், அரசு அலுவலர்கள் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை அடைய பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தி விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முப்பரிமாணத்தில் அமைக்கப்பட்ட ரதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரதம் மாவட்டம் முழுவதும் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கலெக்டர், திருவள்ளூர் ஈக்காடு சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டு உள்ள நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனங்களை சோதனையிடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் திருவள்ளூரில் உள்ள டி.ஆர்.பி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குப்பதிவு மையத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

அப்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், உதவி செயற்பொறியாளர் ஆனந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story