கோட்டக்குப்பம் அருகே, கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு


கோட்டக்குப்பம் அருகே, கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு
x
தினத்தந்தி 2 April 2019 4:00 AM IST (Updated: 2 April 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் இறந்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் வள்ளலார் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் அருண்குமார் (வயது 17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மாணவர் அருண்குமார், தன்னுடன் படிக்கும் சக மாணவர் செல்வா (17) என்பவருடன் ஆரோவில்லுக்கு சென்று அங்குள்ள கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் அருண்குமார், கடல் அலையில் சிக்கிக்கொண்டார். உடனே அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார். இந்த சத்தத்தை கேட்டு பொதுமக்கள் வருவதற்குள் அவரை கடல் அலை இழுத்துச்சென்று விட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மீனவர்களின் உதவியுடன், கடலில் மூழ்கிய மாணவர் அருண்குமாரை தேடினர். இருப்பினும் வெகுநேரம் தேடியும் அருண்குமாரின் கதி என்னவானது என்று தெரியவில்லை. இதையடுத்து தேடும் பணியை கைவிட்டு பாதியிலேயே போலீசார் திரும்பிச்சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை கோட்டக்குப்பம் அருகே முதலியார்குப்பம் கடற்கரை அருகில் அருண்குமாரின் உடல் கரை ஒதுங்கியது. தொடர்ந்து, அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவரின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story