ஸ்ரீபெரும்புதூர் அருகே அனுமதியின்றி கோவில் குளத்தை தூர்வாரி மணல் விற்பனை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை


ஸ்ரீபெரும்புதூர் அருகே அனுமதியின்றி கோவில் குளத்தை தூர்வாரி மணல் விற்பனை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 April 2019 3:30 AM IST (Updated: 2 April 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே அனுமதியின்றி கோவில் குளத்தை தூர்வாரி மணல் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் செங்காடு பகுதியில் பழமையான முத்துவீராசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளம், கோவில் அருகிலேயே உள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த குளம், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் குளத்தை தூர்வார கடந்த 45 ஆண்டுகளாக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் குளத்தில் அதிகப்படியான மண் சேர்ந்ததோடு, பாசி படர்ந்து காணப்பட்டது.

இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை அதிகஅளவு பெய்யாததால், போதிய தண்ணீர் இன்றி செங்காடு முத்து வீராசாமி கோவில் குளம் கடந்த ஒரு மாதமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் செங்காடு பகுதியை சேர்ந்த சிலர், அரசு அனுமதி இன்றி தாங்களாகவே குளத்தை தூர்வாரி அதில் உள்ள மணலை வெளியில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘அரசு அனுமதி இல்லாமல் சிலர், பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர்வாரி வருகின்றனர். அதில் கிடைக்கும் மணலை லாரிகள் மூலம் கொண்டு சென்று செங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கள் சூளை அதிபர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே இதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்னவசந்தி கூறுகையில், ‘குளத்தை தூர்வார அனுமதி ஏதும் வழங்கவில்லை, அனுமதியின்றி குளத்தை தூர்வாரினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Next Story