நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக அமித்ஷா இன்று பெங்களூரு வருகை வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்


நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக அமித்ஷா இன்று பெங்களூரு வருகை வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்
x
தினத்தந்தி 2 April 2019 3:30 AM IST (Updated: 2 April 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவுக்கு வருகிறார். பெங்களூரு தெற்கு தொகுதி வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 18 மற்றும் 23-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 27 தொகுதிகளில் பா.ஜனதா கட்சி போட்டியிடுகிறது. மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு அக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து, பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 8-ந் தேதி மைசூரு மற்றும் சித்ரதுர்காவில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய உள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பெங்களூருவுக்கு வருகிறார்.

அவர், பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 28 வயதான தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார். மேலும் மாலை 6 மணியளவில் பனசங்கரி கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெறும் பேரணியில் அமித்ஷா கலந்துகொள்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்காக அமித்ஷா கர்நாடகத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். இதனால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவிட்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், பிரசார வியூகங்கள் குறித்தும் கட்சியின் தலைவர்கள், பிற நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் தேஜஸ்வினிக்கு பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இதனால் தேஜஸ்வினி அதிருப்தியில் உள்ளனர். எனவே தேஜஸ்வினி மற்றும் பெங்களூரு தெற்கு தொகுதியின் பா.ஜனதா பிரமுகர்களை அழைத்து அமித்ஷா சமாதானப்படுத்துவார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

Next Story