டிராக்டர் மீது அரசு பஸ் மோதல்: 3 பக்தர்கள் பலி சமயபுரம் கோவிலுக்கு பூக்களை கொண்டு சென்றபோது பரிதாபம்


டிராக்டர் மீது அரசு பஸ் மோதல்: 3 பக்தர்கள் பலி சமயபுரம் கோவிலுக்கு பூக்களை கொண்டு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 2 April 2019 4:30 AM IST (Updated: 2 April 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்களை கொண்டு சென்றபோது டிராக்டர் மீது அரசு பஸ் மோதியதில் 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சமயபுரம்,

திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. 4-வது வார பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து டிராக்டர் உள்பட வாகனங்களில் அம்மனுக்கு சாற்றுவதற்காக பூக்கள் எடுத்து செல்லப்பட்டது. இதேபோல, சிறுகனூர் அருகே உள்ள பி.கே.அகரத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் பூக்கூடைகளை வைத்து 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள லால்குடி பிரிவு சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் டிராக்டரில் வந்த பெரம்பலூர் அருகே உள்ள மரவநத்தம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் கவியரசு (வயது 20), பி.கே.அகரத்தை சேர்ந்த ஜான்சன்துரை (55), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துச்செல்வன் (29), இவரது மனைவி பிரியா (23) மற்றும் ஆனந்த செல்வன் (55), முத்துச்செல்வன் மகன் செந்தமிழ்செல்வன் (6), ஏழுமலை (37), இவரது மகன் மணி (4), குணசேகரன் மகன் விக்னேஷ் (19), செல்லதுரை (50), அன்புச்செல்வன் மனைவி ஹேமலதா (21), வேதநாயகம் மகன் ரவி (18), கோவிந்தன் மகன் ராகவன் (17) ஆகிய 13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கவியரசு, ஜான்சன்துரை, முத்துச்செல்வன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் திண்டுக்கல் அருகே உள்ள அய்யனூரை சேர்ந்த சக்திவேல் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்கள் கொண்டு சென்றபோது பஸ் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story