ஓட்டப்பிடாரம்- விளாத்திகுளம் பகுதியில் ரூ.4.60 லட்சம்- 60 சேலைகள் பறிமுதல் பறக்கும்படையினர் அதிரடி நடவடிக்கை
ஓட்டப்பிடாரம்- விளாத்திகுளம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.60 லட்சம்-60 சேலைகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
ஓட்டப்பிடாரம்,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் ஓட்டப்பிடாரம் தாலுகா மேலஅரசடி பகுதியில் தாசில்தார் சிவகாமசுந்தரி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெருமாள் என்பவர் காரில் வந்தார். அவர் காரில் உரிய ஆவணங்கள்இன்றி ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 60 சேலைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல் திருச்செந்தூரை சேர்ந்த திருப்பதி என்பவர் காரில் இருந்து ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.
புதியம்புத்தூர் பகுதியில் தாசில்தார் பாக்கியலட்சுமி தலைமையில் நடந்த சோதனையின் போது, அந்த வழியாக வந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் காரில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பணம் மற்றும் சேலை ஓட்டப்பிடாரம் தேர்தல்துணை தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டது.
விளாத்திகுளம் சுப்பிரமணியபுரம் விலக்கில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வமாலதி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து, அதில் இருந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த பஸ்சில் இருந்த விளாத்திகுளம் முதலியார் தெருவைச் சேர்ந்த அழகுராஜாவிடம் (வயது 49) உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளின் விசாரணையில், அழகுராஜா விளாத்திகுளம் அருகே குளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருவதும், அவர் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்றதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம், விளாத்திகுளம் கிளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story