தக்கலை அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி


தக்கலை அருகே விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 2 April 2019 4:15 AM IST (Updated: 2 April 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பலியானார். நண்பர்களின் கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே மேக்காமண்டபம் மருவூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு பிரதீப், பிரதீஷ் (வயது 18) என 2 மகன்கள். பிரதீப் தக்கலை பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பிரதீஷ் அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ஏசுதாஸ் இறந்து விட்டார். அதன்பிறகு ராணி வீட்டிலேயே முந்திரி உடைக்கும் வேலை செய்து மகன்களை படிக்க வைத்தார். பிரதீஷ் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். சில நேரங்களில் நண்பர்களின் மோட்டார் சைக்கிளிலும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். பின்னர், கல்லூரி முடிந்ததும் நண்பர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது பிரதீஷ், நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு கல்லூரியில் இருந்து திருவிதாங்கோடு நோக்கி சென்றார். அவருக்கு பின்னால், 3 மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, திருவிதாங்கோடு துரப்பு பகுதியில் சென்ற போது திடீரென பிரதீஷ் ஓட்டிய மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரதீஷ் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னால் வந்த நண்பர்கள் இதைகண்டு அதிர்ச்சி அடைந்து அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் பிரதீஷ் பரிதாபமாக இறந்தார். தங்கள் கண் எதிரே பிரதீஷ் இறந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story