கோத்தகிரி வெஸ்ட்புரூக் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்


கோத்தகிரி வெஸ்ட்புரூக் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்
x

கோத்தகிரி வெஸ்ட்புரூக் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளது. இதையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்புச்சுவர் கட்டுதல், மழைநீர் கால்வாய் அமைத்தல், சாலைகளை விரிவாக்கம் செய்தல், பழுதான சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட சாலை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் கோடை விழா நடைபெறும்போது, மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும். அப்போது அனைத்து வாகனங்களும் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாகவே சமவெளி பகுதிகளுக்கு செல்லும்.

இதையொட்டி கோத்தகிரியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான சாலை சீரமைக்கப்பட்டது. மேலும் கோடநாடு செல்லும் சாலையில் மழைநீர் கால்வாய்கள் மற்றும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டன. கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் ரூ.90 லட்சம் செலவில் தடுப்புச்சுவரும், காம்பாய்க்கடை பகுதியில் செல்லும் நீரோடையை ஒட்டி ரூ.25 லட்சத்தில் தடுப்புச்சுவரும் கட்டப்பட்டது.

இதற்கிடையில் மேட்டுப்பாளையம் சாலையில் அரவேனு, கைத்தளா, கொட்டக்கம்பை ஆகிய இடங்களில் உள்ள குறுகிய வளைவுகளில் மண் திட்டுகள் அகற்றப்பட்டு, தடுப்புச்சுவர் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வெஸ்ட்புரூக் பகுதியில் 3 இடங்களில் உள்ள குறுகிய வளைவுகள் அகலப்படுத்தப்பட்டது.

மேலும் ரூ.60 லட்சம் செலவில் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறும்போது, கோடை சீசன் தொடங்குவதற்கு முன்பு இந்த சாலை பணிகள் அனைத்தும் நிறைவு பெறும். இதன் காரணமாக சீசனுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித சிரமமும் இருக்காது என்றார்.

Next Story