நாகர்கோவிலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி கலெக்டர் பங்கேற்பு


நாகர்கோவிலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 April 2019 11:00 PM GMT (Updated: 2 April 2019 2:57 PM GMT)

நாகர்கோவிலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கலந்து கொண்டார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பு பகுதியில் மனித சங்கிலி நடந்தது. இதை குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்து, கலந்து கொண்டார்.

இதில் நாகர்கோவில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவ– மாணவிகள் கலந்து கொண்டு, 100 சதவீதம் வாக்களிக்க ஏதுவாக “தேசத்தின் எதிர்நோக்கு உனது விழியில், தேசத்தின் தீர்ப்பு உனது விரல் நுனியில்” என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தேர்தல் விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசும்போது கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் உள்ள  வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல் 18 அன்று தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நமது மாவட்டத்தில் வாக்கு பதிவு மிகவும் குறைவாக இருந்தது. இந்த ஆண்டு  மாணவ, மாணவிகளாகிய நீங்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல சமுதாயத்தை உருவாக்க, தேசத்தலைவர்களை தேர்ந்தெடுக்க உங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை தவறாது செலுத்த வேண்டும்.

தொடர்ந்து விடுமுறை நாட்களாக இருப்பதால் மாணவ, மாணவிகள் சுற்றுலா சென்றாலும், ஜனநாயக கடமையை நீங்கள் தவறாது நிறைவேற்றிட வேண்டும். விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பும் போது உங்கள் விரலில் வாக்களித்ததற்கான மை இருக்க வேண்டும். குறிப்பாக வாக்களிப்பதை பெருமையாக நினைக்க வேண்டும். வாக்களிக்காமல் இருப்பது நம்மை நாமே குறைத்துக்கொள்ளும் செயலாகும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.

முன்னதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே ராமன்புதூர் சந்திப்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை தனியார் ஆட்டோக்களில் ஒட்டினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (நாகர்கோவில்) விஷ்ணு சந்திரன், அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஸ்ரீரங்கராஜன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் தனராஜ், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story