சென்னையில் 45 இடங்களில் மாநகராட்சி விளையாட்டு திடல்கள் இன்று திறப்பு


சென்னையில் 45 இடங்களில் மாநகராட்சி விளையாட்டு திடல்கள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 3 April 2019 3:15 AM IST (Updated: 3 April 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 45 இடங்களில் மாநகராட்சி விளையாட்டு திடல்கள் இன்று (புதன்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன. இதனால் ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை மாநகராட்சிக்கு நேரடி வருவாய் கிடைக்க உள்ளது.

சென்னை

1947-க்கு முன்பு சென்னை மாநகராட்சியில் 18 ஆக இருந்த விளையாட்டு திடல்கள் தற்போது 210 ஆக உயர்ந்து விட்டன. இவற்றில் மந்தைவெளி, அண்ணாநகர், செனாய்நகர், கே.கே.நகர், வளசரவாக்கம், பெசன்ட்நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கால்பந்து, டென்னிஸ், கைப்பந்து, இறகு பந்து, கூடைப்பந்து விளையாட ஏற்ற மைதானங்கள் அமைக்கப்பட்டு நட்சத்திர அந்தஸ்துமிக்க விளையாட்டு திடல்களும் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த விளையாட்டு திடல்கள் முறையான பயன்பாடின்றி அலங்கோலமாக காட்சியளித்தன. பயிற்சி கருவிகளும், நாற்காலிகளும் சேதமடைந்தன. பயிற்சி மேற்கொள்ள மாணவர்கள் வராததால் சமூகவிரோதிகளின் புகலிடமாக மாற தொடங்கின. இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானதை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி உடனடி நடவடிக்கை மேற்கொண்டது.

புனரமைப்பு பணி தீவிரம்

அந்தவகையில் மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ளடங்கிய (திருவொற்றியூர் தவிர) இறகுப்பந்து, ஸ்கேட்டிங், டென்னிஸ் ஆகிய 3 ரக விளையாட்டு திடல்களை பராமரிக்க தனியாருக்கு ‘டெண்டர்’ விட்டது. டெண்டரில் தேர்வு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந்தேதி பணி ஆணையும் மாநகராட்சி மூலம் அளிக்கப்பட்டது. இந்த விளையாட்டு திடல்கள் தற்போது வேகவேகமாக புனரமைக்கப்பட்டு வருகிறது. பயிற்சி உபகரணங்களும் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளன.

குடிநீர் வசதி உள்பட அத்தியாவசிய வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளன. முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் தொடங்கிய நிலையிலேயே மாநகராட்சிக்கு ரூ.90 லட்சம் வருமானம் ‘டெண்டர்’ மூலம் கிடைத்திருக்கிறது. ஆண்டுதோறும் நேரடியாக ரூ.1 கோடி, மறைமுகமாக ரூ.5 கோடி என மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்க உள்ளது.

இலவச பயிற்சி

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தனியாருக்கு டெண்டர் விடப்பட்டிருந்த 18 டென்னிஸ் மைதானங்கள், 16 ஸ்கேட்டிங் மைதானங்கள், 11 இறகுப்பந்து மைதானங்கள் என 45 மாநகராட்சி விளையாட்டு திடல்கள் இன்று (புதன்கிழமை) முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளன. ஸ்கேட்டிங் பயிற்சிக்கு ரூ.500-ம், இறகுப்பந்து பயிற்சிக்கு ரூ.1,000-ம், டென்னிஸ் பயிற்சிக்கு ரூ.2 ஆயிரமும் மாத கட்டணமாக மாநகராட்சி நிர்ணயம் செய்திருக்கிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்கள், ஏழை-எளிய மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காப்பீட்டு வசதியும் செய்து தரப்படுகின்றன”, என்றனர்.

Next Story