இந்துத்வா பிணைப்பால் பா.ஜனதாவுடன் கூட்டணி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி


இந்துத்வா பிணைப்பால் பா.ஜனதாவுடன் கூட்டணி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி
x
தினத்தந்தி 3 April 2019 5:00 AM IST (Updated: 3 April 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

இந்துத்வா பிணைப்பால் பா.ஜனதாவுடன்கூட்டணி தொடர்வதாகஉத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை,

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வுக்கு அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவுடன் தேர்தல் கூட்டணி ஏன்? என்று நீங்கள் திரும்ப திரும்ப கேட்கலாம். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா என்னை நேரில் சந்தித்தார். ஒரு முறை அல்ல, இரண்டு முறை சந்தித்து பேசினார். இதில் கூட்டணி பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது.

பா.ஜனதாவுக்கும், சிவசேனாவுக்கும் இந்துத்வா என்ற பிணைப்பு எப்போதும் உண்டு. இந்துத்வா என்பது தான் தேசியம். இதனால் 25 ஆண்டுகளுக்கு மேலாக இரு கட்சிகளின் கூட்டணி தொடருகிறது.

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் பதவி யாருக்கு என்பதில் பிரச்சினை எழும். ஒருவருக்கு ஒருவர் அடித்து கொள்வார்கள். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, இப்படியொரு சூழல் உருவானது.

அப்போது குறைந்தபட்சம் ஜெயபிரகாஷ் நாராயண் என்ற தலைவர் செல்வாக்கு பெற்று இருந்தார். ஆனால் தற்போது எதிர்க்கட்சியில் அப்படி யாரும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி நாட்டின் காவலாளி என கூறி வருவது பற்றி கேட்டதற்கு, “நான் சிவசேனா கட்சியின் சிப்பாய். காவலாளி என்று நான் என்னை அழைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ராணுவ வீரர் என்பவர் ராணுவ வீரர் தான். அவர்கள் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இந்த நிலையில் என்னை தனிப்பட்ட முறையில் காவலாளி என்று அழைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று உத்தவ் தாக்கரே பதிலளித்தார்.

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, “யார் மீதும் எனக்கு தனிப்பட்ட பகை கிடையாது. அவர்கள் இருவரும் எனக்கு இளையவர்கள். அவர்களை குழந்தைகளாகவே பார்க்கிறேன். தற்போதைய சூழலில் அவர்கள் தங்களை நிலை நிறுத்தி கொள்ள முயற்சிக்கிறார்கள். ராகுல்காந்தி தலைமையில் தனித்துவம் எதையும் என்னால் காண முடியவில்லை” என்றார்.

Next Story