சேலம் பள்ளி வளாகத்தில் பரிதாபம், பஸ் சக்கரம் ஏறியதில் 3-ம் வகுப்பு மாணவி பலி


சேலம் பள்ளி வளாகத்தில் பரிதாபம், பஸ் சக்கரம் ஏறியதில் 3-ம் வகுப்பு மாணவி பலி
x
தினத்தந்தி 3 April 2019 5:00 AM IST (Updated: 3 April 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பள்ளி வளாகத்தில் பஸ் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி 3-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தாள்.

சேலம்,

சேலம் ஜாகீர் அம்மா பாளையம் அருகே உள்ள ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் சையது ரபீக் (வயது 38). இவர் சவுதி அரேபியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்து வந்தார். தற்போது சேலத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஆயிஷாசுகைனா (8). இவள் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் ஆயிஷா சுகைனாவை நேற்று காலை 9.15 மணி அளவில் உறவினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். பின்னர் பள்ளி நுழைவு வாசலில் மாணவியை இறக்கி விட்டு விட்டு சென்றார். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய மாணவி, வகுப்பறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

பள்ளி வளாகத்துக்குள் அதே பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் இருந்து மாணவிகள் இறங்கினார்கள். அதன் பின்னர் டிரைவர் பஸ்சை பின்நோக்கி இயக்கினார். அப்போது நடந்து சென்று கொண்டிருந்த மாணவி மீது பஸ் மோதியது. இதில் கீழே விழுந்த மாணவி மீது கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி ஆயிஷா சுகைனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதை பார்த்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் சத்தம் போட்டபடி சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.

பின்னர் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதை அறிந்து பள்ளிக்கு வந்த அவளது பெற்றோர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த மகளின் உடலை தூக்கி வைத்துக்கொண்டு கதறி அழுதனர். இது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.

இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி பஸ் சக்கரம் ஏறி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story