கணினி குலுக்கல் முறையில் அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


கணினி குலுக்கல் முறையில் அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 April 2019 9:30 PM GMT (Updated: 2 April 2019 8:42 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் தேர்தல் பணியிடம் ஒதுக்கப்பட்டது. இதனை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தேவையான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. நெல்லை மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவுக்காக 2,982 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள், 3 நிலைகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 261 வாக்குச்சாவடி 4-வது நிலை அலுவலர்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 561 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அடுத்தகட்டமாக வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2-வது கட்ட பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் ஊழியர்கள், ஆசிரியர்கள் எந்த பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்களோ? அந்த பகுதிக்கு உரிய தாலுகா அலுவலக தலைமையிடத்தில் நடைபெறும்.

இதற்காக அவர்களுக்கு தேர்தல் பணியிடம் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ரேண்டமைசேஷன் எனப்படும் கணினி குலுக்கல் முறையில் நடைபெற்ற இந்த ஒதுக்கீடு பணியை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஷில்பா தொடங்கி வைத்தார். நெல்லை நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் பகத்சிங் குலேஷ், தென்காசி தொகுதி பொது பார்வையாளர் ஹர்சவர்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், (தேர்தல்) சாந்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், முதன்மை கல்வி அலுவலர் பாலா, தேர்தல் தாசில்தார் புகாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story