குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பார்வையாளர்கள் நேரம் நீட்டிப்பு
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பார்வையாளர்கள் நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக இருப்பதால் சுற்றுலா தலங்கள் அதிகளவு உள்ளன. மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருகிறார்கள்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளித்து விட்டு குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகிறார்கள்.
குன்னூரில் தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள சிம்ஸ் பூங்கா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இந்த பூங்கா காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்த சென்னையை சேர்ந்த பெண் வக்கீல் தம்பதியினரை காட்டெருமை ஒன்று தாக்கியது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தம்பதியரில் பெண் வக்கீல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து பூங்காவில் பார்வையாளர்கள் நேரம் மாலை நேரத்தில் 6.30 மணிக்கு பதிலாக ½மணி நேரம் முன்னதாக மாலை 6 மணிக்கு மூடப்பட்டது. பூங்காவிற்குள் காட்டெருமைகள் நுழையாதவாறு தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க தோட்டக்கலை துறை நிர்வாகம் முடிவு செய்தது. அப்போதைய தோட்டக்கலை இயக்குனர் அர்ச்சனா பட்நாயக் சுற்றுச்சுவர் அமைக்கும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார். இதன் பேரில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து உள்ளது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் முதல் சீசன் விரைவில் தொடங்க இருப்பதாலும், சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பார்வையாளர்கள் நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை சிம்ஸ் பூங்கா திறந்து இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story