எடப்பாடி பழனிசாமி குமரியில் இன்று பிரசாரம் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து 3 இடங்களில் பேசுகிறார்


எடப்பாடி பழனிசாமி குமரியில் இன்று பிரசாரம் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து 3 இடங்களில் பேசுகிறார்
x
தினத்தந்தி 3 April 2019 4:45 AM IST (Updated: 3 April 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) பிரசாரம் செய்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து 3 இடங்களில் பேசுகிறார்.

நாகர்கோவில்,

அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து, மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்தநிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து குமரி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

இதற்காக நெல்லையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு கார் மூலம் இன்று இரவு 7 மணிக்கு வருகிறார். அவருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம் தலைமையில், பா.ஜனதா வேட்பாளரான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் மற்றும் அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தோவாளையில் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.

பின்னர் 7.30 மணிக்கு பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசார வேனில் நின்றவாறு தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்கிறார்.

அதையடுத்து 8 மணிக்கு நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் பிரசாரம் செய்கிறார்.

பிறகு 8.45 மணி அளவில் திங்கள்சந்தையில் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு அவர் கன்னியாகுமரியில் இரவு தங்குகிறார். மறுநாள் காலையில் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் செல்கிறார்.

Next Story