இளைஞர்களின் வாழ்வை வளப்படுத்த தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்


இளைஞர்களின் வாழ்வை வளப்படுத்த தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்
x
தினத்தந்தி 3 April 2019 4:30 AM IST (Updated: 3 April 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களின் வாழ்வை வளப்படுத்த தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அழகியமண்டபம்,

தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று குளச்சல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வில்லுக்குறி அருகே உள்ள திருவிடைக்கோடு சடையப்பர் கோவிலில் இருந்து திறந்த ஜீப்பில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

அவர் திருவிடைக்கோடு, பாறையடி, சரல்விளை, வில்லுக்குறி, மாடத்தட்டுவிளை, குளுமைக்காடு, வில்லுக்குறி சந்திப்பு, பரசேரி, மேலகருப்புக்கோடு, கண்டன்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு வீதி, வீதியாக மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்துக்கு நான் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். குறிப்பாக பார்வதிபுரம் மேம்பாலம், மார்த்தாண்டம் மேம்பாலம், சுசீந்திரம் பாலம் போன்ற பால பணிகளையும், நான்கு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைப்பணிகளையும் நிறைவேற்றி உள்ளேன். துறைமுகம் திட்டம் கட்டாயம் கொண்டு வரப்படும். அவ்வாறு துறைமுகம் வரும்பட்சத்தில் இளைஞர்கள் வேலை தருபவர்களாகவும், முதலாளிகளாகவும் திகழ்வார்கள்.

குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைய வேண்டும் என்பது 60 ஆண்டுகால கனவு திட்டமாகும். அதை கொண்டு வருவதற்கு நாம் முயற்சி மேற்கொள்கிறோம். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அதை தடுக்க நினைக்கிறார். நமது மாவட்ட இளைஞர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் துறைமுக திட்டம். இந்த துறைமுகம் வராவிட்டால் நான் பாதிக்கப்படப்போவது இல்லை. எனக்கென்று எதுவுமே கிடையாது.

ஆனால் இந்த மாவட்ட மக்களாகிய உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். உங்களது தலைமுறைகள் இந்த மண்ணில் வாழ்ந்தாக வேண்டும். அதற்காகத்தான் நான் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். துறைமுகத்திட்டம் நிறைவேற்றப்படும்போது நமது மக்கள் வேலைக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை இருக்காது. இளைஞர்கள், குழந்தைகள் வாழ்வை வளப்படுத்த, அவர்களுக்கு வளமான எதிர்காலம் அமைய நீங்கள் அனைவரும் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், குளச்சல் தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர் ரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், த.மா.கா. கிழக்கு மாவட்ட தலைவர் டி.ஆர்.செல்வம், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் ராஜேஸ்வர பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story