காரங்காடு கிராமத்தில் சுற்றுலா பயணிகளை கவர படகு சவாரி வனத்துறை ஏற்பாடு


காரங்காடு கிராமத்தில் சுற்றுலா பயணிகளை கவர படகு சவாரி வனத்துறை ஏற்பாடு
x
தினத்தந்தி 3 April 2019 3:47 AM IST (Updated: 3 April 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

காரங்காடு கிராமத்தில் சுற்றுலா பயணிகளை கவர படகு சவாரி வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொண்டி,

தொண்டி அருகே உள்ள காரங்காடு. இங்குள்ள சுற்றுலா மையத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படகு சவாரி மூலம் மாங்குரோவ் காடுகளின் அழகையும், கடல்பசு தீவு, பல்வேறு வகையான பறவையினங்களின் அழகையும் ரசித்து செல்கின்றனர். இக்கிராமத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனதை கவரும் விதமாக அமைந்துள்ள மாங்குரோவ் காடுகள் சுற்றுலா பயணிகளை வெகுவாகவே கவர்ந்துள்ளன. நீண்டதூரம் படகு சவாரி செய்ய 2 பைபர் படகுகள் உள்ளன. இதில் ஏறி கடலில் பயணம் செய்பவர்கள் இங்குள்ள காடுகளையும், கடல்புறா, கொக்கு, சாம்பல் நாரை, கடல் ஊழா, நீர்க்காகம் போன்ற பறவை கூட்டங்களையும், சீசன் காலங்களில் இங்கு வரும் பிளமிங்கோ, தேன்பருந்து, கடல் பருந்து, கூழைக்கிடா போன்ற எண்ணற்ற பறவைகளின் அழகையும் இங்குள்ள கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி நின்று பார்த்து ரசிக்கலாம்.

சுற்றுலா பயணிகள் விரும்பினால் கடலுக்குள் நீந்தி கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களை பார்க்கும் வசதியை வனத்துறையை செய்து கொடுத்துள்ளது. இங்கு ஏற்கனவே அடிப்படை வசதிகள் குறைவாக இருந்தது. தற்போது படகு குழாம் அருகில் இயற்கை எழில் சார்ந்த வகையில் மரங்களினால் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவர் அமர்ந்து செலுத்தும் கயாக்கிங் என்று சொல்லப்படும் படகு சவாரி வசதி செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி செய்ய பாதுகாப்பு கவசம் மற்றும் வழிகாட்டுனர் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


Next Story