அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம், தி.மு.க.-காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி - சேலத்தில் சரத்குமார் பேச்சு
சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்யும் போது, தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறினார்.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று தொகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து சேலம் ரெட்டியூர், ஜாகீர்அம்மாபாளையம், கருப்பூர், வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, சர்க்கரை செட்டிபட்டி, பண்ணப்பட்டி, தீவட்டிப்பட்டி, ஓமலூர் உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் ஒரு நிலையான ஆட்சி, பெரும்பான்மையான ஆட்சி என்ற நிலையிலேயே ஒரு சிறந்த கூட்டணியை வைத்திருக்கிறோம். மத்தியிலே ஒரு வலிமையான பெரும்பான்மையுள்ள அரசு அமைந்தால் தான் தமிழகத்திற்கு அனைத்து சலுகைகளும், நிதி ஒதுக்கீடும் கிடைக்கும். எதிர்க்கட்சி தலைவர் எங்கு சென்றாலும் இந்த கூட்டணி பற்றி சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லி வருகிறார். தி.மு.க.-காங்கிரஸ் தான் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி.
காங்கிரஸ் ஆட்சி 4 தலைமுறைகளாக இந்தியாவை வஞ்சித்த ஒரு கட்சி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நேரு காஷ்மீர் பிரச்சினையை என்னிடம் விட்டு விடுங்கள், நான் அதை பார்த்துக் கொள்கிறேன் என்றார். ஆனால் இதுநாள் வரை காஷ்மீர் பிரச்சினை தீர்ந்ததா?. மு.க.ஸ்டாலின் எங்கு சென்றாலும் நான் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.
மிசா சட்டம் யார் கொண்டு வந்தார்கள்?, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தான் கொண்டு வந்தார்கள். இதனால் நீங்கள் ஜெயிலுக்கு போனீர்கள். இதை அவர் ஒரு சாதனையாக பேசி கொண்டிருக்கிறார். காவிரி பிரச்சினை இதுநாள் வரைக்கும் தீர்க்கப்படாமல் இருந்ததற்கு காரணம் காங்கிரஸ்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதை தட்டிக்கேட்க முடியாத நிலையில், திராணி இல்லாமல் தி.மு.க. காங்கிரசுடன் கைகோர்த்துள்ளது. தற்போது மு.க.ஸ்டாலின், 7 பேர் விடுதலை குறித்து பேசி வருகிறார். ஆனால் மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ஏன்? ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய மறுத்தது. அப்போது ஏன்? அவர்களிடம் 7 பேர் விடுதலை குறித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தவில்லை.
ராகுல்காந்தி அடுத்த பிரதமர் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மற்றயாரும் சொல்லவில்லை. ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாட்டில், கம்யூனிஸ்டு கட்சியை எதிர்த்து போட்டியிடுகிறார். ஆனால் அவர்கள் தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். எது சந்தர்ப்பவாதம் என பார்த்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாஜலம், வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி மற்றும் அ.தி.மு.க.வினர், கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story