தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தாசில்தார் எவரும் எனது வீட்டிற்கு வரவில்லை - அமைச்சர் தங்கமணி பேட்டி
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு தாசில்தார் எவரும் எனது வீட்டிற்கு வரவில்லை என அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல்,
ராசிபுரம் கொங்கு மண்டப பிரச்சினை தொடர்பாக நானும், அமைச்சர் சரோஜாவும் ஒருவரை விலைக்கு வாங்கி, அவர் வீட்டிற்கு சென்றதாக கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். நாங்கள் அவர் வீட்டிற்கு சென்றது உண்மை. நாங்கள் அவ்வழியாக கூட்டத்தை முடித்துவிட்டு வந்தபோது, அவர்தான் எங்களை அவரின் வீட்டிற்கு அழைத்தார். ஆனால் அவர்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்த பிரச்சினை தொடர்பாக என்னை சந்தித்து புகார் கூறி வருகிறார்கள்.
இது சமுதாயம் சார்ந்த மண்டபம், அதனால் யாரும் கோபப்பட வேண்டாம் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் நாங்கள் சொல்லி வருகிறோம். அந்த மண்டபத்தில் நடந்ததை எல்லாம் அவர்கள் எங்களிடத்தில் ஆதாரமாக கொடுத்துள்ளார்கள்.
வேட்பாளராக நிற்பவர் தவறு இல்லை என்று சொன்னால், அவர்களை அழைத்துப்பேசி, என்ன உண்மையோ அதைச்சொல்லி இருக்கலாம். அதை விட்டுவிட்டு சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்தநிலையில் எங்களை கொச்சைபடுத்தும் வகையில் அவரது வீட்டிற்கு சென்றதை, நாங்கள் ஏதோ அவரை விலைக்கு வாங்கி வேட்பாளரை பற்றி தவறாக சொல்ல வைப்பதைபோல சொல்கின்றனர்.
எங்களுக்கு அந்த அவசியமே கிடையாது. அந்த மண்டபம் தொடர்ந்து சிறப்பாக செயல்படவேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.
அதேபோல் தாசில்தார்கள் என்னை வீட்டில் வந்து சந்திப்பதாக ஈஸ்வரன் புகார் சொல்லி இருக்கிறார். தோல்வியின் கோபத்தை ஒத்துக்கொள்ளும்வகையில் ஆதாரம் இல்லாத புகார்களை அவர் சொல்லிவருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்று அமலுக்கு வந்ததோ, அன்றிலிருந்து தாசில்தார் அல்ல, ஒரு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர்கூட எனது வீட்டிற்கு வரவில்லை.
அவர் ஆதாரம் இருந்தால், நிச்சயமாக உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கட்டும். ஆனால் தேதி மற்றும் நேரத்தோடு இருக்கும் வீடியோவை கொடுக்கவேண்டும்.
ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தால் நான் ஏற்கமாட்டேன். தினந்தோறும் அரசியல் செய்வதற்கு ஈஸ்வரன் என்னை வம்புக்கு இழுக்கிறார். விவாதம் நடத்தும்போது 2 கட்சியினரும் மண்டபத்தில் இருந்தால் தகராறு ஏற்படும் என்பதற்காக, பத்திரிகையாளர்கள் மத்தியில் விவாதம் நடத்தலாம் என சொல்லியிருந்தேன். இப்போது அவர் தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
எங்களுடைய இயக்கம் பெரிய இயக்கம். நான் போய் அவர்களை சந்திப்பதை தவிர்க்க நினைக்கிறேன். எங்களுக்கு இணையானவர்கள் அவர்கள் இல்லை என்பதை புரிந்துகொண்டேன். எப்போது அவர் தாசில்தார்கள் என்னை வீட்டில் சந்திப்பதாக பொய்யான புகார்களை சொன்னாரோ, இனிமேல் அவரை நேரில் சந்திப்பது தேவையில்லை என முடிவு செய்துவிட்டேன். இனிமேல் பத்திரிகையாளர்கள் மூலம் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, நானும் பத்திரிகையாளர்கள் மூலம் பதில் சொல்கிறேன்.
உடனடியாக நான் பயந்துகொண்டு விவாதத்திற்கு வரவில்லை என சொல்வார்கள். எனக்கு பயம்இல்லை. வேண்டுமென்றால் 18-ந் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் விவாதத்தை வைத்துக்கொள்ளலாம். பொள்ளாச்சி விவகாரம் கோர்ட்டில் உள்ளதால், அதை நேரடியாக விவாதித்து தேவையில்லாத பிரச்சினைக்குள் நாங்கள் உள்ளே செல்ல விரும்பவில்லை.
வருகிற 11-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அன்று காலை 8.30 மணிக்கு ராசிபுரத்திலும், 9.30 மணிக்கு சேந்தமங்கலத்திலும், 10.30 மணிக்கு நாமக்கல்லிலும், 11.30 மணிக்கு பரமத்திவேலூரிலும், 12.30 மணிக்கு திருச்செங்கோட்டிலும், 1.30 மணிக்கு ஆட்டையாம்பட்டியிலும் பிரசாரம் செய்யஉள்ளார்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
முன்னதாக அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் நடந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமசந்திரன், மாவட்ட செயலாளர் முரளி மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே நேற்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் காளியப்பன் மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சப்பையாபுரம், மாமுண்டி, மங்களம், பள்ளக்குழி அக்ரஹாரம், செண்பகமாதேவி, கூத்தாநத்தம், பிள்ளாநத்தம், மேல்முகம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.
அவருடன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் மோகன், பேரூர் செயலாளர் சுந்தர்ராஜன், த.மா.கா. மாவட்ட நிர்வாகி செல்வகுமார் மற்றும் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story