வானவில் : சுற்றுச் சூழலை பாதிக்காத பேட்டரி ஸ்கூட்டர் ‘டிரென்ட் இ’
சுற்றுச் சூழலை பாதிக்காத வாகனங்களை உருவாக்குவதில் முன்னணியில் திகழும் அவான் மோட்டார்ஸ் நிறுவனம் ‘டிரென்ட் இ’ என்ற பெயரில் புதிய பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
புனேயைச் சேர்ந்த இந்நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்களை உருவாக்குவதில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் ஜீரோ மற்றும் ஜீரோ பிளஸ் என்ற பெயரில் இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ‘டிரென்ட் இ’ என்ற பெயரில் புதிய பேட்டரி ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இதில் அதிகபட்சமாக மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இதில் ஒரு பேட்டரியை சார்ஜ் செய்தால் 60 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும். இரண்டு பேட்டரியையும் சார்ஜ் செய்தால் 110 கி.மீ. வரை பயணிக்கலாம்.
பேட்டரி முழுவதும் சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும். ‘டிரென்ட் இ’ ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஷாக் அப்சார்பர் உள்ளது. பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் சவுகரியமான பயணத்தை உறுதி செய்கிறது. இதில் சிறப்பம்சமாக அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன. 150 கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இரண்டு பேர் எளிதாக பயணிக்கலாம். சுற்றுச் சூழலை விரும்புவோர் விரும்பும் வகையில் இது அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு ஆகியவை ஒன்றிணைந்த கலவையாக இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுத் தலைவர் பங்கஜ் திவாரி தெரிவித்துள்ளார். பேட்டரியை கழற்றி மாட்டும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பேட்டரியை சார்ஜ் போட்டுவிட்டு, மற்றொரு பேட்டரியில் பயணிக்கலாம். இதன் விலை ரூ.56,900 ஆகும். இரண்டு பேட்டரியுடன் வாங்கினால் விலை ரூ.81,269. இதை ரூ.1,100 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
Related Tags :
Next Story